சாலையை சீரமைக்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்


சாலையை சீரமைக்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்
x
தினத்தந்தி 7 Jan 2022 2:03 AM IST (Updated: 7 Jan 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்கக்கோரி தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருச்சி
திருச்சி பாலக்கரை அருகே முதலியார் சத்திரத்தில் ரெயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இங்கு சரக்கு ரெயிலில் இருந்து நெல், உரம், கோதுமை, மக்காச்சோளம் போன்ற மூட்டைகளை தொழிலாளா்கள் லாரிகளில் ஏற்றி அனுப்புவர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலைகளில் லாரிகள் செல்லும்போது குலுங்கி லாரியில் ஏற்றப்பட்டுள்ள மூட்டைகள் சாலைகளில் சரிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது. 
சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்
இந்த சாலை ரெயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த சாலையை சீரமைக்கக்கோரி லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரெயில்வே நிர்வாகத்துக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது வரை இந்த சாலை சீரமைக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று மதியம் இந்த குண்டும்-குழியுமான சாலையில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றபோது, அதில் இருந்து சுமார் 15 மூட்டைகள் சாலையில் சரிந்தன. அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த சுமைதூக்கும் தொழிலாளி மேல் நெல்மூட்டை விழுந்தது.
சாலை மறியல்
இதைப்பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள், மூட்டைகளை அகற்றி அவரை மீட்டனர். மூட்டைகள் மேலே விழுந்ததில் அவர் மூச்சுபேச்சின்றி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர்.
 இதுபற்றி அறிந்த குட்ஷெட் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் திருச்சி பாலக்கரையில் மேலப்புதூர் செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள், குண்டும்-குழியுமான குட்ஷெட் சாலையை சீரமைக்கக்கோரி அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story