திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் தீவிர கண்காணிப்பு


திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 2:05 AM IST (Updated: 7 Jan 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது.

சேலம்:-
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது.
கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து நேற்று மாவட்டத்தில் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.  மேலும் 10, 11, 12-ம் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மாநகரில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள ஜவுளிக்கடை உள்பட பல்வேறு கடைகளில் வருவாய்த்துறை, மாநகராட்சி உள்பட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 50 சதவீதத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். கட்டுப்பாடு விதிமுறை கடைபிடிக்காமல் இருந்த கடை உரிமையாளர்களிடம் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தீவிர கண்காணிப்பு
சேலம் மாநகரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல சினிமா தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், ஊழியர்கள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்க்கெட்டுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் சமூக இடைவெளிைய கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வந்தால் முககவசம் அணிந்து தான் வரவேண்டும். முககவசம் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது என்றனர்.
மேட்டூர் பூங்கா
இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேட்டூர் அணை பூங்கா நேற்று முதல் மூடப்பட்டது. இதை அறியாமல் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதே போல ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரி பூங்கா, சேலம் அண்ணா பூங்கா போன்றவை மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story