மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்


மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினார்
x
தினத்தந்தி 7 Jan 2022 2:23 AM IST (Updated: 7 Jan 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி போலீசில் சிக்கினார்.

குன்னம்:

தப்பியோடிய கைதி
பெரம்பலூர், குன்னம், மருவத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு, வயல்வெளிகளில் பணிபுரிந்த பெண்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தெரணிபாளையம் கிராமம், நடுத்தெருவை சேர்ந்த சதாசிவத்தின் மனைவி சின்னபொண்ணு (வயது 50), மகன்கள் பழனிச்சாமி (24), தர்மராஜ் (21) ஆகியோரை மருவத்தூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், உடல் பரிசோதனை செய்து, டாக்டரிடம் சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது தர்மராஜ் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கோவிந்தசாமி மற்றும் போலீசார் அம்பேத்கர், அலெக்ஸ், மாரிமுத்து, கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் தர்மராஜை பல இடங்களில் தேடி வந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்நிலையில் நேற்று காலை லால்குடி பஸ் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக வந்த தர்மராஜை, அங்கு ஏற்கனவே மறைந்திருந்த போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் தர்மராஜை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story