3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
3 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது 36). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். இதேபோல் அவரது வீட்டிற்கு அருகில் குடியிருந்து வரும் ரேவதியும்(35) வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். நேற்று அவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது 2 வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது சிவானந்தம் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், அரை பவுன் தோடு, வெண்கல குத்து விளக்கு ஆகியவையும், ரேவதி வீட்டில் வெள்ளி கொலுசையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் கை.களத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சங்கிலி- தங்க காசுகள்
மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் கிராமத்தில் வசிப்பவர் அம்சலட்சுமி(50). இவரது கணவர் செல்வராசு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அம்சலட்சுமி நேற்று வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை கம்பியால் நெம்பி திறந்து, 2 பவுன் சங்கிலி மற்றும் ஒரு பவுன் தங்க காசுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அம்சலட்சுமி அளித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story