இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.
பெரம்பலூர்:
சரியாக கடைபிடிப்பதில்லை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தவும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கையும் அமல்படுத்த உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை.
திரையரங்குகளில் மட்டும் 50 சதவீத பார்வையாளர்கள் சினிமா பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புக்கு தடை விதிக்கப்பட்டதால், 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகளில் அரசின் கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் உணவகங்களில் அரசின் உத்தரவு கடைபிடிக்கப்படாமல் 50 சதவீதத்துக்கு மேல் அமர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். நகைக்கடை, துணிக்கடைகளிலும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதில்லை.
பஸ்களில் கூட்டம் அலைமோதியது
அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் 50 சதவீதத்துக்கு மேல் பயணிகள் பயணித்து வருகின்றனர். தற்போது கல்லூரிகளுக்கு வருகிற 20-ந்தேதி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்த மாணவ-மாணவிகள் நேற்று தங்களது உடமைகளை எடுத்து கொண்டு சொந்த ஊர் செல்வதற்கு படை எடுத்தனர். இதனால் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது.
பெரும்பாலானோர் முககவசமும் அணிவதில்லை. சமூக இடைவெளியை பின்பற்றுவதும் இல்லை. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிப்பதில்லை.
இரவு நேர ஊரடங்கு அமல்
இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. இரவு 10 மணிக்கு அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றை மூட போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அவை மூடப்பட்டன. இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் இரவு 10 மணிக்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் போலீசார் ரோந்து பணியிலும், முக்கியமான இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். திரையரங்குகளில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டது.
இரவு நேர ஊரடங்கின்பொது போக்குவரத்துக்கு தடை இல்லை என்பதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. மருந்தகம், பால் விற்பனை நிலையம், மருத்துவமனைகள் ஆகியவை வழக்கம்போல் இயங்கின. 108 ஆம்புலன்சு, ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் வழக்கம் போல் ஓடின. இரவு நேர ஊரடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
Related Tags :
Next Story