ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jan 2022 2:36 AM IST (Updated: 7 Jan 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி சத்திய பிரியா (வயது 40). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திற்கு நேற்று தன்னுடைய 2 குழந்தைகளுடன் வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை சத்திய பிரியா திறந்து தனது உடல் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சத்திய பிரியாவை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்குள் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
கணவர் இறப்பு
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
எனக்கும், எனது கணவர் மாதேஸ்வரனுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆனது. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 2-வது மகன் மன வளர்ச்சி குன்றியவர். என் கணவர் கார் விபத்தில் சிக்கி கடந்த 2020-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து எனது கணவரின் பெற்றோர், தம்பி, அவரது மனைவி ஆகியோர் என் பெயரில் உள்ள சொத்தினையும், என் கணவர் பெயரில் உள்ள சொத்தினையும் அவர்கள் பெயருக்கு எழுதி வாங்கி விட்டு, தற்போது நாங்கள் வசித்து வரும் வீட்டை காலி செய்யும் படி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்
மேலும் எனது கணவர் இறப்பதற்கு முன்பும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். சொத்தினை அவர்கள் பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் எனவும், இல்லாவிட்டால் என்னையும், எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இவர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டும், இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஈரோடு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் வழக்கினை வாபஸ் பெறக்கோரி நேற்று முன்தினம் மாலை எனது கணவரின் குடும்பத்தார் என்னிடம் தகராறு செய்து, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய கணவரின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story