தடையை மீறி 9-ந்தேதி பாதயாத்திரை நடத்தினால் காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை; கர்நாடக அரசு எச்சரிக்கை
தடையை மீறி 9-ந்தேதி பாதயாத்திரை நடத்தினால் காங்கிரசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
பெங்களூரு:
விரிவான திட்ட அறிக்கை
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. குடிநீர் மற்றும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரித்து ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது அங்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதற்கான ஒப்புதலை பெற கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. மத்திய ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஜல்சக்தித்துறை, மேகதாதுவில் அணை கட்ட காவிரி நிர்வாக ஆணையம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் பாதயாத்திரை
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மேகதாது திட்டத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்தார்.
இதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இது மக்களின் நலனுக்காக நடத்தப்படும் பாதயாத்திரை அல்ல, ஓட்டுக்காக நடத்தப்படும் பாதயாத்திரை என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
புதிய கட்டுப்பாடுகள்
காங்கிரசின் பாதயாத்திரை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஆளும் பா.ஜனதாவும் குற்றம்சாட்டியது. இந்த விஷயத்தில் குமாரசாமிக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் பொருட்டு கர்நாடகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியல்,சமூக-கலாசார நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் உள்ளிட்டவை நடத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களின் பாதயாத்திரையை தடுக்கும் நோக்கத்தில் தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டி வருகிறார். மேலும் திட்டமிட்டபடி 9-ந் தேதி பாதயாத்திரையை தொடங்குவோம் என்று அவர் அறிவித்துள்ளார்.
பொறுப்பான எதிர்க்கட்சி
இந்த நிலையில் தடையை மீறி பாதயாத்திரை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பா.ஜனதா திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியினர், திட்டமிட்டப்படி பாதயாத்திரையை நடத்துவோம் என்று கூறுகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் காங்கிரஸ் கட்சி ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியை போல் நடந்து கொள்ளவில்லை.
போராட உரிமை
எப்படி நடந்து கொள்வது என்பது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இதை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். 7 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மேகதாது திட்டத்தை செயல்படுத்த எதையும் செய்யவில்லை. இப்போது நீருக்காக போராடுவதாக அக்கட்சி தலைவர்கள் சொல்கிறார்கள். கொரோனா பரவாத சாதாரண நாட்களில் போராட அனைத்து உரிமையும் அவர்களுக்கு உள்ளது. ஆனால் போராட்டம் நடத்த இது சரியான தருணம் இல்லை.
கொரோனா பரவல் காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பா.ஜனதா சார்பில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 9-ந் தேதி வரை நடைபெற இருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்தினால் காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் சமமானது
விதிமுறைகள் அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் வெவ்வேறு கிடையாது. சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்ட விதிகளை மீறினால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் நீண்ட காலமாக அரசியலில் உள்ளனர். அரசியல் கட்சிகளின் நலனை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனிப்போம். விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கொரோனா பரவும்போது காங்கிரசுக்கு மட்டும் எப்படி சிறப்பு அனுமதி வழங்க முடியும். இது சாத்தியமில்லை.
இவ்வாறு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
Related Tags :
Next Story