திருமணம் நடத்த அனுமதி பெற வேண்டும்


திருமணம் நடத்த அனுமதி பெற வேண்டும்
x
தினத்தந்தி 7 Jan 2022 3:41 AM IST (Updated: 7 Jan 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

நாகர்கோவில்:
திருமண நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழு ஊரடங்கு
தமிழக அரசின் உத்தரவுப்படி முழு ஊரடங்கு 10-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுடன் குமரி மாவட்டத்தில் 6-ந் தேதி (அதாவது நேற்று) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அனுமதிக்கப்படும் சேவைகள் வருமாறு:-
குமரி மாவட்டத்தில் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
திருமண மண்டபத்துக்கு சீல்
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் சமூக இடைவெளியை பின்பற்றி 100 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்வுகள் 9-ந் தேதி போன்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் நாட்களைத் தவிர இதர நாட்களில் கீழ்க்கண்ட முறைப்படி அனுமதிக்கப்படும். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கு முறைப்படி சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரின் முன் அனுமதி பெற வேண்டும். 
நாகர்கோவில் கோட்டத்திற்குள் நடத்தப்படும் திருமணங்களுக்கு rdongl.marriage.covid19@gmail.com என்ற மின்னஞ்சலிலும், பத்மநாபபுரம் கோட்டத்திற்குள் நடத்தப்படும் திருமணங்களுக்கு pdmpermissions@gmail.com என்ற மின்னஞ்சலிலும் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் மற்றும் கோட்டாட்சியரின் அனுமதி பெற்றே திருமணம் நடத்த வேண்டும்.
திருமண அழைப்பிதழ் கடிதம், மணமக்கள் ஆதார் கார்டு மற்றும் விண்ணப்பிப்பவர் ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களை மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசின் உத்தரவின்படி திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்ற நிபந்தனை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அதனை மீறும் திருமண வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருமணம் நடைபெறும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபம், ஆடிட்டோரியம் மூடி சில் வைப்பதோடு அபராதமும் விதிக்கப்படும்.
50 பேர்
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி 50 நபர்கள் வரை மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ஒமைக்ரான் வராமல் தங்களை பாதுகாக்க உடனே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 
அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைப்பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படுவர். 
வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் அதிகமாக கடைகள், வணிக நிறுவனத்தினுள் நுழைவதை உரிமையாளர் கண்காணிக்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள்
வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க ஏதுவாக உரிய நடவடிக்கைகளை கடை நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நிபந்தனைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story