நாகர்கோவிலில் மாநகராட்சி பூங்காக்கள் மூடல்
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் நேற்று மூடப்பட்டன.
நாகர்கோவில்:
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் நேற்று மூடப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்தலங்கள், படகு சவாரி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள், ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து நாகர்கோவில் நகரில் உள்ள பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான வேப்பமூடு சந்திப்பு பகுதியில் மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு பகல் நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பொழுதை போக்கி செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவின் ஒரு பகுதியில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தமும் உள்ளது. இதனால் நாகர்கோவில் வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து செல்பவர்கள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை இந்த பூங்காவில் நிறுத்திச் செல்வது வழக்கம்.
பூங்காக்கள் மூடல்
இந்தநிலையில் அரசு உத்தரவை தொடர்ந்து நேற்று முதல் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா மற்றும் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பூதப்பாண்டி அருகில் உள்ள முக்கடல் அணைப்பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவும் மூடப்பட்டது. அதேநேரத்தில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்காவுக்குள் கார்களை நிறுத்த மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பூங்காக்கள் மூடப்பட்டது தெரியாமல் நேற்று நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்கும், முக்கடல் பகுதியில் உள்ள பூங்காவுக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். பூங்காக்களின் முன்பு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து பூங்காவுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் நேற்று மூடப்பட்டன.
Related Tags :
Next Story