தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரம் குவிந்து கிடக்கும் மணல்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள, பெரியார் மேம்பாலம் தொடக்கம் முதல் முடிவு வரை சாலையில் இரு புறமும் மணல் தேங்கி கிடக்கிறது. சாலையோரம் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது மண்ணில் சறுக்கி விழுந்து விபத்துக்கள் நடக்கின்றன. அப்படி இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது அதற்கு பின்னால் வரும் மற்ற வாகனங்களும் ஒன்றொன்று மோதுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாைலயோரம் குவிந்து கிடக்கும் மணலை மாநகராட்சி அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தனிக்கவனம் செலுத்தி அந்த மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பள்ளி அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அள்ளி சுத்தம் செய்து மாணவர்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பள்ளி மாணவர்கள், குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.
பஸ்கள் நின்று செல்லுமா?
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை உள்ளது. இப்பகுதி மக்கள், சேந்தமங்கலம், ஏளூர், திருமலைப்பட்டி, செல்லப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேலம் செல்வதற்காக புதன்சந்தை பஸ் நிறுத்தம் வருகின்றனர். ஆனால் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் புதன்சந்தையை தவிர்த்து மேம்பாலத்தின் மீது செல்வதால், அவசர தேவைக்கு மக்கள் சேலம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே நாமக்கல்லில் இருந்து புறப்படும் அரசு பஸ்சை புதன்சந்தையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், வினைதீர்த்தபுரம், நாமக்கல்.
சாலை வசதி வேண்டும்
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா வைகுந்தம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காளிப்பட்டி பிரிவு ரோடு வழியாக மயானம் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஸ்ரீமகா, காளிப்பட்டி பிரிவு ரோடு, சேலம்.
தேங்கி கிடக்கும் குப்பைகள்
சேலம் மாநகராட்சி 6-வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் சாலையோரத்தில் 5 மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. கொரோனா பரவும் நிலையில் இப்படி குப்பைகளை அள்ளாமல் இருப்பது கவலையாக இருக்கிறது. இதற்கு அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களோ?
-ஊர்பொதுமக்கள், குறிஞ்சி நகர், சேலம்.
குடிநீருக்காக அலையும் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி சுண்ணாலம்பட்டி கிராமத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் விவசாய கிணறு தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செ.பிரபாகரன், சுண்ணாலம்பட்டி, கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story