ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி சினிமா தியேட்டர்களிலும் கட்டுப்பாடு
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சினிமா தியேட்டர்கள், கடைகளிலும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.
கடலூர்,
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது.
இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் அரசு நேற்று முன்தினம் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல் படுத்தப்பட்டது.
வழிகாட்டு முறைகள்
கடலூர் மாவட்டத்திலும் இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. கடலூர் மாவட்ட ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அதாவது சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஓட்டல் வாசலில் சானிடைசர், கை கழுவ சோப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதில் வாடிக்கையாளர்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இது பற்றி கடலூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் நாராயணன் கூறுகையில், அரசு விதித்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடலூர் மாவட்ட ஓட்டல்களில் கடைபிடித்து வருகிறோம். ஓட்டலுக்கு வருவோருக்கு உடல் வெப்ப நிலையை கண்டறிந்த பிறகே அனுமதிக்கிறோம். ஓட்டலுக்கு வரும் போதே, அவர்களுக்கு சானிடைசர், சோப்பு வழங்குகிறோம். அதை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை சுத்தம் செய்கிறார்கள்.
காய்கறிகள், அரிசி, பருப்பு போன்றவற்றை நன்றாக கழுவிய பிறகு தான் பயன்படுத்தி வருகிறோம். சுகாதாரமான முறையில் உணவு பரிமாறி வருகிறோம். ஓட்டல்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். விடுபட்டவர்களையும் அழைத்து போட வைத்துள்ளோம். அரசின் உத்தரவை முழுமையாக பின்பற்றி வருகிறோம் என்றார்.
சினிமா தியேட்டர்கள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீதம் பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில், இருக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அதாவது ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு உள்ளது.
நுழைவு வாசலில் சானிடைசர் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப நிலையை கண்டறிந்த பிறகே தியேட்டர்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தியேட்டரில் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்கிறோம் என்று தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வணிக வளாகங்கள்
வணிக வளாகங்கள், கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தி வருகிறது.
Related Tags :
Next Story