வேப்பேரியில் போலீஸ் வேடத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம்
சென்னை வேப்பேரியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், போலீஸ் என்று ஏமாற்றி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் நகை பறிப்பு
சென்னை வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சசிகலா (வயது 64). இவர், நேற்று முன்தினம் பகலில் தனது வீட்டு அருகே உள்ள பழக்கடையில் பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் தங்களை போலீசார் என்று கூறினார்கள். ஆனால் போலீஸ் சீருடை
அணிந்திருக்கவில்லை.
சசிகலாவிடம், இங்கு திருடர்கள் நடமாட்டம் உள்ளது. இவ்வளவு நகைகள் அணிந்திருப்பது ஆபத்தானது, என்று கூறி சசிகலா கழுத்தில் கிடந்த தங்கத்தாலி சங்கிலி, 4 வளையல்கள் மற்றும் 2 மோதிரங்கள் உள்பட 10 பவுன் நகைகளை கழற்றி, சசிகலா வைத்திருந்த மணிபர்சுக்குள் வைப்பது போல நடித்தார்கள். பின்னர் 10 பவுன் நகைகளையும் நைசாக அபகரித்துக்கொண்டு ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.
தேடுதல் வேட்டை
சம்பவம் நடந்த அதே சாலையில் சற்று தொலைவில்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. ஆனால் கொஞ்சமும் பயம் இல்லாமல், கொள்ளையர்கள் தங்களை போலீஸ் என்று சொல்லி, துணிச்சலாக இந்த நூதன கொள்ளைச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.வீட்டுக்கு சென்று மணிபர்சை திறந்து பார்த்த சசிகலா, அதற்குள் நகைகள் இல்லாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேப்பேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக வைத்து தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story