‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதிய மின்கம்பத்தால் மக்கள் நிம்மதி
சென்னை ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள அந்தோணிநகரில் மின்கம்பம் சேதம் அடைந்து அபாய நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு ஆபத்தான மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பம் நடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள பிரசாத் லேப் நடைபாதையில் ஜல்லிகற்கள், மணல் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் வாகன போக்குவரத்துக்கு மத்தியில் அச்சத்துடன் சாலையில் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
-சமுத்திரபாண்டி, சாலிகிராமம்
குப்பை கழிவுகளும்... சுகாதார சீர்கேடும்...
சென்னை சாலிகிராமம் பொன்னியம்மன் கோவில் தெரு அருகே உள்ள 'பாராமவுண்ட் கார்டன்' பகுதி, சினிமா படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தற்போது கழிவுநீர் மிகுதியாக தேங்கியுள்ளது. குப்பை கழிவுகள் அதில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் துர்நாற்றம் பரவி அந்த பகுதியே சுகாதார சீர்கேட்டில் சிக்கியிருக்கிறது. கொசுக்களின் படையெடுப்பால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குடியிருப்புவாசிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த சுகாதார சீர்கேட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
- பொதுமக்கள்.
வடியாத மழைநீரால் அவதி
சென்னை அயப்பாக்கம் ஜெயின் நகர் முல்லை தெருவில் மழைநீர் இன்னும் வடியாமல் குளம் போன்று தேங்கி உள்ளது. இதனால் 8 குடும்பங்கள் வெளியே சென்று வர முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. மேலும் தேங்கி உள்ள தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி இன்னல்களை அளிக்கின்றன. எனவே எங்களுடைய கஷ்டத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் நிம்மதி அடைவோம்.
-குடியிருப்போர்கள், அயப்பாக்கம்.
பராமரிப்பின்றி கிடக்கும் மழைநீர் வடிகால்வாய்
சென்னையை அடுத்த புழுதிவாக்கம் ஜெயாநகர் டி.ஆர்.பாலு தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்த கால்வாய் பாதையில் மண் அடைத்திருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இத்தெருவில் மழைநீர் தேங்கி வடிய மறுக்கிறது. பலமுறை புகார் அளித்தும் இதுவரை பலன் இல்லை.
- தெரு மக்கள்.
கழிவுநீர் பிரச்சினை
சென்னை திருவல்லிக்கேணி மதுருனிஷா பேகம் தெருவில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறிக்கொண்டு இருக்கிறது. இதனால் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வெளியேறுவதுடன், கொசுக்களின் படையெடுப்பும் மிகுதியாக இருக்கிறது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள்.
மழைநீர் தேக்கமும், மக்கள் அவதியும்...
திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பூங்காநகர் பூஞ்சோலை தெருவில் மழைநீர் மிகுதியாக தேங்கி கிடக்கிறது. இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. இத்தெருவில் தான் ரேஷன் கடை உள்ளது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வரும் மக்கள் தேங்கிய மழைநீரை கடக்க சிரமப்படுகிறார்கள்.
- சமூக ஆர்வலர்.
நோய் பரவும் அபாயம்
சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர் டாக்டர் அம்பேத்கர் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேட்டுடன் காட்சி அளிக்கிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுடைய இன்னல்களை உணர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
- மீனாட்சி, தரமணி.
நாய்கள் தொல்லையால் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை சாஸ்திரி காலனி 2-வது தெரு, சென்னை ராமாவரம் நேருநகர் ஏழுமலை அவென்யூ, திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெரு, மாதா கோவில் தெரு, காமராஜர் தெரு, ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் விரிவாக்க பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. சாலையில் செல்வோரை விரட்டி கடிக்க பாய்கிறது.
- பொதுமக்கள்.
ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கவனிப்பார்களா?
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தச்சூர் கிராமத்தில் கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. எனவே வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.) சிறப்பு தணிக்கை நடத்த வேண்டும். பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து, டிரைவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
- கிராம மக்கள்.
Related Tags :
Next Story