திருவாரூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன


திருவாரூர் மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 7 Jan 2022 11:35 PM IST (Updated: 7 Jan 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக வார இறுதி 3 நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.

கொரடாச்சேரி;
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி 3 நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று குறைந்ததால் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. வருகிற 10-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நேற்றுமுன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தினமும் நடைபெறும்  பூஜைகள், வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று முதல் மூடப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. வழிபாட்டு தலங்களில் கதவுகள்  மூடப்பட்டிருந்ததால் வாசலில் நின்றபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  
தியாகராஜர் கோவில் 
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும்  வழிபாடு நடத்த அனுமதிக்கப் படாததால் கோவில்கள் பூட்டப்பட்டு வெறிச்சோடின. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மார்கழி கடைசி வெள்ளியை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் மார்கழி மாத பகல்பத்து விழாக்கள் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று பக்தர்கள் இன்றி பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் மற்றும் புலிவலம் அப்பன் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் இன்றி பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. அரசின் தடை உத்தரவு தெரியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தமிழக அரசின் உத்தரவு காரணமாக நேற்று திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவில் பூட்டப்பட்டு இருந்தது. 
இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற அபிஷ்ட வரதராஜர் பெருமாள் மற்றும் 16 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்கள் பூட்டப்பட்டு இருந்தது. 
ராஜகோபாலசாமி கோவில்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ திருத்தலம் 
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் ஆகும். நேற்று அரசு உத்தரவுப்படி இந்த கோவில் நடை மூடப்பட்டது. 
கோவிலில் அன்றாடம் நடக்கும் பூஜைகள் வழக்கம்போல நடைபெற்றன. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story