ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை
சமீபத்தில் பெய்த கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விளைநிலங்கள் மூழ்கி பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். எனவே பயிர்களை இழந்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மழை பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பலத்த மழையால் ஆடு, மாடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கால்நடைகளை பாதுகாக்க கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை உடன் நடத்த வேண்டும். மழை, வெள்ளத்தால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமையில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலையில் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.வி.சந்திரராமன், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆ.பாஸ்கர், இந்திய கம்யூனிஸ் செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் ஏராளமான விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வாகனங்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் வாகனங்கள் தடைபட்டு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story