அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது


அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
x
தினத்தந்தி 7 Jan 2022 11:50 PM IST (Updated: 7 Jan 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.

தளி
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மலை அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. 
அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பஞ்சலிங்க அருவியில் கடந்த சில மாதங்களாக நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற அய்யப்பபக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.
கட்டுப்பாடுகள் அமல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா 3-வது அலையும் ஒமைக்ரான் தொற்றும் மாநிலம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நோய் பரவலை தடுப்பதற்காக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பிரசித்தி பெற்ற திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மும்மூர்த்திகள் உள்ளிட்ட கடவுள்களுக்கு வழக்கம்போல் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. 
கோவில் வெறிச்சோடியது
பரபரப்பாக காணப்படும் அமணலிங்கேஸ்வரர் கோவில் நேற்று பக்தர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திருமூர்த்திமலைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம், நீச்சல் குளம் வரை மட்டுமே வந்து திரும்பிச் சென்றனர்.

Next Story