குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடல்;திற்பரப்பு அருவி, கடற்கரைகள் வெறிச்சோடின
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி திற்பரப்பு அருவி, கடற்கரைகள் வெறிச்சோடின.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி திற்பரப்பு அருவி, கடற்கரைகள் வெறிச்சோடின.
சுற்றுலாதலங்கள் மூடல்
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களும் நேற்று முதல் மூடப்பட்டன.
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் காலை நேரத்தில் சூரிய உதய காட்சியை காண முக்கடல் சங்கம பகுதியில் சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். ஆனால் நேற்று தடை விதிக்கப்பட்டதின் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக கழக படகுத்துறையான வாவத்துறை கடற்கரை பகுதியில் கூடி நின்று சூரிய உதய காட்சியை கண்டு களித்தனர்.
கடற்கரை வெறிச்சோடியது
ஆனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கம்போல் ஏராளமானோர் குளிக்க வந்திருந்தனர். அவர்களை போலீசார் திரும்ப அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மேலும் வட்டக்கோட்டை, சொத்தவிளை பீச், சங்குத்துறை பீச், தெக்குறிச்சி பீச், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, பேச்சிப்பாறை அணை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story