கரூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 Jan 2022 12:29 AM IST (Updated: 8 Jan 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர், 
சிறப்பு மையம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதிக அளவிலான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சையளிக்க ஏதுவாக 5 இடங்களில் அமைக்கப்பட உள்ள கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையங்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
3-வது அலை
கொரோனா தொற்றின் 3-வது அலையாக மருத்துவ வல்லுனர்களால் கருதப்படும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 
அதனடிப்படையில், புகளூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர் மாவட்ட பழைய தலைமை மருத்துவமனை, தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி மற்றும் செட்டிநாடு பொறியியல் கல்லூரி ஆகிய 5 இடங்களில் கொரோனா தொற்றின் 2-ம் அலையின்போது அமைக்கப்பட்டதை போலவே கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
ஆக்சிஜன் வசதியுடன் 1,114 படுக்கைகள்
இந்த சிறப்பு சிகிச்சை மையங்களில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்தும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் ஆக்சிஜன் படுக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்கின்றனர். மூன்று நாட்களுக்குள் அனைத்து சிறப்பு சிகிச்சை மையங்களும் தயார் நிலையில் வைக்கப்படும். அதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா தொற்றாளர்களுக்கென்று மொத்தம் 167 படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் 1,114 படுக்கைகள் உள்ளன. 
ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
கரூர் மாவட்டத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதிக அளவிலான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story