குமரியில் வழிபாட்டு தலங்கள் கோவில்கள் மூடல்;கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


குமரியில் வழிபாட்டு தலங்கள் கோவில்கள் மூடல்;கோவில்களுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 8 Jan 2022 12:37 AM IST (Updated: 8 Jan 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததால் குமரியில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நாகர்கோவில், 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3 நாட்கள் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்ததால் குமரியில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. தமிழ் மாதமான மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் காலை நேரங்களில் பெரும்பாலான பக்தர்கள் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். மார்கழி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று ஆகும். இந்த மாதம் நிறைவடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்திருப்பதால் பக்தர்கள் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வெளியில் நின்று தரிசனம்
இதேபோல் வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வெள்ளிக்கிழமையான நேற்று இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியவில்லை. இதேபோல் கிறிஸ்தவர்களும் வழக்கமான பிரார்த்தனைகளுக்காக ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கோவில்களில் தடுப்புகள் அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் வழக்கம்போல் கோவில்களில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.
இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில் முருகன் கோவில், வெள்ளிமலை முருகன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story