ராமநாதபுரத்தில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார்-கலெக்டர் தகவல்
ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கு 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கு 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் சென்று கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.அப்போது கலெக்டர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6-ந்ேததி நிலவரப்படி 67 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 4 நபர்கள் மட்டும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 63 நபர்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லாமல் லேசான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
250 ஆக்சிஜன் படுக்கைகள்
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் மருத்துவ திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய நவீன கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல 11 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு மருத்துவ ஆக்சிஜன் சேமிக்கும் கட்டமைப்பு வசதியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கேற்ப இதனை 500 படுக்கைகளாக அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும் பிற அரசு மருத்துவமனைகளில் தலா 20 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கென தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு சிகிச்சை வழங்கிட ஏதுவாக ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி மற்றும் குயவன்குடி கிராமத்தில் உள்ள தனியார் பயிற்சி மையக் கட்டிடம் ஆகியவற்றில் தலா 100 படுக்கைகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் சூழ்நிலைக்கேற்ப பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா பாதுகாப்பு மையங்களில் படுக்கை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அல்லி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story