தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் பஸ் நிலையத்தில் பருவமழையால் ஏற்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தில் மண்ணை கொட்டி சமப்படுத்தினர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், கீரமங்கலம், புதுக்கோட்டை.
நூலகத்திற்கு கட்டிடம் வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூரில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போதுமான கட்டிட வசதியில்லாததால் வாசகர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். புத்தகங்களை பராமரிக்கவும், பாதுகாத்திடவும் வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகரம்சீகூர் ஊர்ப்புற நூலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அகரம்சீகூர், பெரம்பலூர்.
தார் சாலை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, திருப்பைஞ்ஞீலி ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்மானப்பாளையம் கீழூரில் இருந்து கொண்டான் தெரு வரையுள்ள மண் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் நன்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது சாலையில் புழுதி பறப்பதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், வாழ்மானப்பாளையம், திருச்சி.
போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்படுமா?
அரியலூர் டவுனில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்துவதே ஆகும். இதனால் 108 ஆம்புலன்ஸ் வரும்போது சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
திருச்சி வயலூரில் உள்ள வாசன் நகர் 7வது வீதியின் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அவை அகற்றப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே பறந்து சென்று விழுவதினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை கால்நடைகள் உண்பதினால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாசன் நகர், திருச்சி.
தூர்வாரப்படாத பெரிய ஓடை
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி கீழ் பாகத்திற்கும், மேல்பாகத்திற்கும் இடையே உள்ள பெரிய ஓடை தூர்வாரப்படாமல் முட்புதர்கள் அதிகமாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் வடிய வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஓடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிடமங்கலம், கரூர்.
செவிலியர்கள் இன்றி நோயாளிகள் அவதி
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையில் போதுமான செவிலியர்கள் இல்லாததால் அவசர நேரத்தில் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தேவையான செவிலியர்களை பணியமா்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அந்தநல்லூர், திருச்சி.
Related Tags :
Next Story