தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
உடனுக்குடன் நடவடிக்கை
சேலம் மாநகராட்சி 6-வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் சாலையோரத்தில் 5 மாதங்களாக குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசியது. கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் இருந்தது. இதுதொடர்பாக நேற்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. நேற்று காலையில் செய்தியை பார்த்தவுடன் அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கையில் இறஙகினர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வரவழைத்து குவிந்து கிடந்த குப்பைகளை உடனே அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனா
-ஊர்பொதுமக்கள், குறிஞ்சி நகர், சேலம்.
தார்ச்சாலை அமைக்கப்படுவது எப்போது?
தர்மபுரி ரெயில் நிலைய சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றுகாணப்பட்டது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரெயில் நிலைய சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சாலையில் ஆங்காங்கே கிடந்த மணல் குவியல் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன. இந்த பணி முடிவடைந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை.அந்த சாலை புழுதியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் காட்சி அளிக்கிறது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்கள் மட்டும் இல்லாமல் சாலையில் நடந்தும் கூடசெல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், இ.பி.காலனி, தர்மபுரி.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் டி.பி.லிங்க் ரோடு, மோகன்ராவ் காலனி, 4-வது கிராஸ் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கைவும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், மோகன்ராவ் காலனி, கிருஷ்ணகிரி.
பஸ்கள் நின்று செல்லுமா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல்- ராசிபுரம் செல்லும் பஸ்கள் ராசிபுரம் பிரிவு சாலையில் நிற்பது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாமக்கல்-ராசிபுரம் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ராசிபுரம், நாமக்கல்.
Related Tags :
Next Story