தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Jan 2022 2:28 AM IST (Updated: 8 Jan 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


சாய்ந்த கம்பம் சரி செய்யப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரிக்கும் செட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இன்டர்நெட், தொலைப்பேசி மற்றும் கேபிள் டி.வி. ஒயர்கள் தாறுமாறாக தொங்கி கொண்டிருந்தன. மேலும் இந்த ஒயர்களை தாங்கி நிற்கும் கம்பமானது சாலையை நோக்கி சாய்ந்த வண்ணம் நின்றது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் 4-1-2022 அன்று ெசய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாறுமாறாக தொங்கிய ஒயர்கள் சீரமைக்கப்பட்டது. மேலும், சாய்வாக நின்ற கம்பம் நேராக நிறுத்தப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இருளில் மூழ்கும் கிராமம்
வெள்ளிசந்தை பஞ்சாயத்து ஆசாரிவிளை பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஷ்ணு, ஆசாரிவிளை.

முடங்கி கிடக்கும் பணி
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அமராவதி ரோட்டில் கழிவுநீர் ஓடையில் அடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஞ்சாயத்து ஊழியர்கள் ஓடையின் மேல் பகுதியை திறந்து சீரமைப்பு பணியை தொடங்கினர். ஆனால் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியில் போட்டுவிட்டு சென்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முடங்கி கிடக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-முகமது இக்பால், திருவிதாங்கோடு.

உடைந்த இருக்கைகள்
பூதப்பாண்டி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நலன்கருதி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், நோயாளிகள் அமர முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, உடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சீரமைக்க வேண்டிய சாலை
களியல் அருகே மேல்பாரூர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் நோயாளிகளை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கார், ஆட்டோ போன்ற வாகனங்களை வாடகைக்கு அழைத்தால், சாலை சரி இல்லாததால் சவாரிக்கு வர மறுக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷைஜின் ஜான், மேல்பாரூர்.

தெருவிளக்குகள் எரியவில்லை
பீமநகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாத்மா நகர் பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் வேலைக்கு சென்றுவிட்டு வரும் தொழிலாளர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, மின்விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-மகேஷ், பீமநகர்

சாலையை சீரமைக்க வேண்டும்
இரவிபுதூர்கடையில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் பழையகடையை அடுத்து திட்டுமேல்கோணம் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் மழைநீர் ஓடையைெயாட்டி சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெஸ்பின், சிராயன்குழி.

Next Story