பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை தீவிரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 8 Jan 2022 2:48 AM IST (Updated: 8 Jan 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது செங்கரும்பு தான். செங்கரும்பு, மஞ்சள், அரிசி போன்ற பொருட்கள் வைத்து பொங்கல் சீர் கொடுப்பது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம். அந்த பழக்கம் இன்றளவும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் புதிதாக திருமணமான பெண்களுக்கு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பொங்கல் சீர் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி ஈரோட்டை அடுத்த பி.பி.அக்ரஹாரம் அருகே உள்ள சமயசங்கிலி பகுதியில் தற்போது செங்கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் 1,000-க் கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. செங்கரும்பு சாகுபடி செய்ய ரூ.1½ லட்சம் வரை செலவாகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை செங்கரும்புகள் விளையும். 400 செங்கரும்புகள் தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று இந்த விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. 
இங்கு வெட்டப்படும் செங்கரும்புகள் தற்போது குஜராத் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு செங்கரும்புகள் வெட்டி அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசு எங்கள் பகுதியில் இந்த ஆண்டு செங்கரும்புகள் கொள்முதல் செய்யவில்லை. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெளி மாநில மற்றும் மாவட்ட   வியாபாரிகள் செங்கரும்புகள் வாங்க அச்சப்படுகிறார்கள். இதன் காரணமாக எங்கள் பகுதியில் அதிக அளவில் செங்கரும்புகள் தேக்கம் அடைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story