மந்திரி உள்பட 8,449 பேருக்கு கொரோனா...!!! பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் அரசு அதிர்ச்சி
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் மந்திரி ஆர்.அசோக் உள்பட 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பெங்களூரு:
உடல்நலக்குறைவு
கர்நாடகத்தில் வருவாய்த்துறை மந்திரியாக இருப்பவர் ஆர்.அசோக். மூத்த மந்திரிகளில் ஒருவரான அவர், கொரோனா தடுப்பு தொடர்பான அரசின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். அரசின் முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார். கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.
அந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு
பெங்களூருவில் கடந்த 4-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரி ஆர்.அசோக் கலந்து கொண்டார். அரசின் முடிவுகளை பத்திரிகையாளர்களிடம் அவர் தான் அறிவித்தார். அவர் முதல்-மந்திரியின் அருகில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.அசோக்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருடன் மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொண்ட மந்திரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று அவர்கள் பயந்துபோய் உள்ளனர். ஆர்.அசோக்குடன் அருகில் இருந்து பேசியவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அவர் எப்போதும் முதல்-மந்திரியுடன் அருகில் அமர்ந்து பேசி வந்துள்ளார். அதனால் பசவராஜ் பொம்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
8,449 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 3 ஆயிரத்து 260 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 31 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 505 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 62 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூருவில் 6,812 பேர்
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 4.15 சதவீதமாக உள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெங்களூரு நகரில் 6,812 பேர், பல்லாரியில் 62 பேர், பெலகாவியில் 114 பேர், பெங்களூரு புறநகரில் 74 பேர், பீதரில் 20 பேர், சிக்பள்ளாப்பூரில் 21 பேர், சிக்கமகளூருவில் 24 பேர், சித்ரதுர்காவில் 14 பேர், தட்சிண கன்னடாவில் 211 பேர், தாவணகெரேயில் 18 பேர், தார்வாரில் 66 பேர், கதக்கில் 10 பேர், ஹாசனில் 89 பேர், கலபுரகியில் 43 பேர், குடகில் 29 பேர், கோலாரில் 98 பேர், மண்டியாவில் 129 பேர், மைசூருவில் 219 பேர், ராமநகரில் 20 பேர், சிவமொக்காவில் 43 பேர், துமகூருவில் 96 பேர், உடுப்பியில் 148 பேர், உத்தரகன்னடாவில் 36 பேர், விஜயாப்புராவில் 36 பேர் உள்ளனர்.
கர்நாடக அரசு கவலை
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெங்களூரு நகரில் 3 பேரும், தட்சிண கன்னடாவில் ஒருவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 5,031 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் 3 ஆயிரம் அதிகரித்து 8,449 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பெங்களூரு மட்டுமின்றி பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், மைசூரு, மண்டியா, உடுப்பி, கோலார் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் மாநிலத்தில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்கள் ஊரடங்கையும் மாநில அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் மாநிலத்தில் மந்திரி உள்பட 8,449 பேருக்கு நேற்று வைரஸ் பரவல் ஏற்பட்டு இருப்பது கர்நாடக அரசையும், சுகாதாரத்துறையையும் கவலை அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story