கொடுங்கையூரில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேருக்கு கொரோனா
கொடுங்கையூரில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பெரம்பூர்,
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளியில் நேரடி வகுப்பு நடக்கிறது.
அதன்படி சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி மறைமலை அடிகளார் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது பெற்றோர், மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
அந்த மாணவியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பள்ளியில் மாணவியுடன் படிக்கும் சக மாணவ-மாணவிகள் 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மேலும் 27 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் 28 பேர் பாதிக்கப்பட்டதால் அதே பள்ளியில் படிக்கும் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு ஓரிரு நாட்களில் வரும் என தண்டையார்பேட்டை மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story