பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இடைநிலை அமைப்பு கருவி இஸ்ரோவிடம் ஒப்படைப்பு
திருவொற்றியூரில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இடைநிலை அமைப்பு கருவி இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனம் கனரக எந்திர பொருட்கள், ராட்சத சிமினி உள்ளிட்ட பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கனரக பொருட்களை தயாரித்து வினியோகம் செய்து வருகின்றது.
இந்தநிலையில் இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இடைநிலை அமைப்பு கருவி தயாரிக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக 2.8 மீட்டர் சுற்றளவில் 4.1 மீட்டர் உயரத்தில் முழுவதும் அலுமினியத்தாலான 700 கிலோ எடையுள்ள சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான இந்த இடைநிலை அமைப்பு கருவி தயாரிக்கப்பட்டது.
பின்னர் பல்வேறு சூழலில் வெப்பம் தாங்கும் திறன் சோதனை மேற்கொள்ளப்பட்டு இந்த இடைநிலை அமைப்பு கருவி முழுவதுமாக தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாரானது. இதையடுத்து அந்த நிறுவனத்தினர் காணொலி காட்சி மூலம் இஸ்ரோ அதிகாரிகளிடம் கருவியை ஒப்படைத்தனர்.
இதில் அந்த நிறுவன தலைவர் எம்.நாராயண ராவ், இஸ்ரோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் டாக்டர் சீனிவாசன், மேலாளர் எட்வின் சிபி, குடியுரிமை தர குழுவை சேர்ந்த ஹரிகரன், சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கன்டெய்னர் லாரி மூலம் இடைநிலை அமைப்பு கருவி இஸ்ரோவுக்கு எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story