மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்


மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:02 PM IST (Updated: 8 Jan 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், ஊட்டியில் உள்ள மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், ஊட்டியில் உள்ள மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் ஒமைக்ரான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தொற்று பரவலை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள், பால் வினியோகம் செய்யும் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல் செயல்படும். அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்காது. 

முழு ஊரடங்கால் நீலகிரியில் இருந்து திருச்சி, சேலம் போன்ற தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நேற்று இரவு போக்குவரத்து பணிமனைகளுக்கு திரும்பி வர வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மளிகை, காய்கறி, பழக்கடைகள், வணிக வளாகங்கள், நகை கடைகள், துணிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. 

கூட்டம் அதிகரிப்பு

இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதால் நேற்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் சரியாக முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்றதால் தொற்று பரவும் அபாயம் காணப்பட்டது. 

அதேபோல் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று இரவு ஊரடங்கு 10 மணி முதல் இன்று அதிகாலை வரை அமலில் இருப்பதால், அதைத்தொடர்ந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

450 போலீசார் பாதுகாப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவசர மற்றும் மருத்துவத் தேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி உள்ளது. முழு ஊரடங்கையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊட்டி சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட், லவ்டேல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகன சோதனை நடத்துகின்றனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, அவசியமின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.


Next Story