மார்க்கெட் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்


மார்க்கெட் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:11 PM IST (Updated: 8 Jan 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று திருப்பூரில் காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

திருப்பூர்
முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று திருப்பூரில் காய்கறி மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேவையில்லாமல் சுற்றித்திரியக்கூடாது என்று காவல்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளனர். மளிகை கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், டீக்கடை, பேக்கரிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் உழவர் சந்தையும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட் மற்றும் இறைச்சி, மீன் கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட், கடைகளில் குவிந்தனர்
இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு முககவசம் அணிய அனைவரையும் அறிவுறுத்தினார்கள். அதுபோல் மாநகராட்சி சுகாதார பணியாளர்களும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மளிகை கடைகளிலும் மக்கள் நேற்று இரவு பொருட்களை வாங்க குவிந்தனர்.
இறைச்சி, மீன் கடைகள் இன்று செயல்படாது என்பதால் நேற்று இரவு இறைச்சி, மீன் கடைகளில் கூட்டம் களை கட்டியது. அசைவ பிரியர்கள் முன்கூட்டியே இறைச்சி, மீன்களை வாங்கி சென்றனர். ஆனால் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இரவு 10 மணியை நெருங்க, நெருங்க கூட்டம் அதிகமானது. போலீசாரும் தீவிர ரோந்துப்பணியை முடுக்கி விட்டனர்.
வாகன நெரிசல்
பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்ததால் மாநகரின் பிரதான சாலைகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. முழு ஊரடங்கால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்பதால் தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் கடைவீதிகளுக்கு நேற்று பொதுமக்கள் படையெடுத்தனர். அதுபோல் விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களும் நேற்று காலை முதல் செல்ல தொடங்கினார்கள். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வாகன நடமாட்டமும் அதிகரித்தது.
நேற்று இரவு 11 மணி வரை தொலைதூர அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று பஸ்கள் ஓடாது என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்திருந்தனர். பயணிகளின் வருகையை பொறுத்து பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story