கொரோனா பாதித்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள 4 மையங்கள்


கொரோனா பாதித்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள 4 மையங்கள்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:32 PM IST (Updated: 8 Jan 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ள 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர்
திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ள 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
4 இடங்களில் பரிசோதனை மையம்
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்த நபர்களுக்கு முதல்கட்ட உடல் பரிசோதனை செய்வதற்கு 4 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
அதன்படி 1-வது மண்டலத்துக்கு 14-வது வார்டு சிறுபூலுவப்பட்டியில் உள்ள சமுதாயக்கூடத்திலும், 2-வது மண்டலத்துக்கு 18-வது வார்டு வாவிபாளையம் ஜெ.ஜெ.நகரில் உள்ள சமுதாயக்கூடத்திலும், 3-வது மண்டலத்துக்கு 35-வது வார்டு விஜயாபுரத்தில் உள்ள சமுதாயக்கூடத்திலும், 4-வது மண்டலத்துக்கு 52-வது வார்டு பழவஞ்சிப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட உடல் பரிசோதனைகள் இந்த 4 மையங்களில் மேற்கொள்ளப்படும். இங்கு படுக்கைகள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். தொற்று பாதித்த நபர்களுக்காக இந்த மையம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு தொற்றின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளவோ அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்படும்.
ஆணையாளர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொற்று பாதித்த ஒருவர், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதியில்லாத நிலையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட 48-வது வார்டு நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் 100 படுக்கைகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. 
இந்த பணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி நேற்று ஆய்வு செய்தார். இதுபோல் மேலும் 3 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

Next Story