காதல் மனைவியின் கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்த பட்டதாரி வாலிபர்


காதல் மனைவியின் கர்ப்பம் கலைந்ததால் விஷம் குடித்த பட்டதாரி வாலிபர்
x
தினத்தந்தி 8 Jan 2022 8:38 PM IST (Updated: 8 Jan 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்த மனைவியின் கர்ப்பம் கலைந்த தகவல் அறிந்த பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம்:
காதலித்து திருமணம் செய்த மனைவியின் கர்ப்பம் கலைந்த தகவல் அறிந்த பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டதாரி வாலிபர் காதல் திருமணம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அர்ஜூனா(வயது 22). இவர், கோவையில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து விட்டு வேளாங்கண்ணி அருகே பரவை மெயின் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். 
அர்ஜூனா கோவையில் படித்தபோது கோவையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ஜூனா தனது மனைவியுடன் தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள தனது தாத்தா சோமசுந்தரம் வீட்டிற்கு வந்தார். 
மகளை அழைத்து சென்றார்
அங்கு அர்ஜூனா தனது மனைவியுடன் வசித்து வந்தார். இதற்கிடையில் அர்ஜூனாவின் மனைவி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த பெண்ணின் தாயார் தனது மகளை பார்ப்பதற்காக தெற்கு பொய்கைநல்லூர் வந்தார். அங்கு தனது மகளுடன் சமாதானம் பேசி அவரை தன்னுடன் அழைத்து சென்றார். 
அப்போது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் அர்ஜூனாவின் மனைவி உயிருக்கும், அவரது குழந்தைக்கும் எந்தவிதமான பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்கிறேன் என எழுத்துபூர்வமாக எழுதி கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. 
கர்ப்பம் கலைந்ததாக தகவல்
இந்த நிலையில் கோவைக்கு சென்ற பின்னர் தனது மனைவி தன்னுடன் நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அர்ஜூனா நேற்று முன்தினம் தனது மனைவியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது கர்ப்பம் கலைந்து விட்டதால் தான் பேசவில்லை என அந்த பெண் கூறியுள்ளார்.
இதனையடுத்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்திற்கு சென்ற அர்ஜூனா தனது மனைவியை மீட்டு தரும்படி புகார் செய்தார். 
விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மேலும் மனமுடைந்த அர்ஜூனா நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story