எட்டயபுரத்தில் சாலையில் நடந்த ஆட்டுச்சந்தை
கொரோனா காரணமாக எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் சாலையில் சந்தை நடந்தது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த ஆட்டுச்சந்தைக்கு நெல்லை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.
இந்த ஆட்டுச்சந்தையில் சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரையிலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருவிழா காலங்களில் ரூ.6 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடைபெறும். இதனால் ஆட்டுச்சந்தை களைகட்டும்.
இந்த ஆண்டு ெபாங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், ஆடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும் ஏராளமான வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும் வந்து குவிந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆட்டுச்சந்தை நடத்துவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் திடீர் தடை விதித்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும் எட்டயபுரம் சாலைகளில் ஆட்டு விற்பனையை தொடங்கினர். எட்டயபுரம்-கோவில்பட்டி சாலை மற்றும் மார்க்கெட் சாலையில் ஆடுகள் விற்பனை நடந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் சமூக இடைவெளி இன்றி வியாபாரம் நடைபெற்றது. மேலும் பலர் முககவசம் அணியவில்லை.
இதை அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் வியாபாரம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ஆட்டுச்சந்தைக்கு தடை குறித்து முறையாக முன்அறிவிப்பு செய்து இருக்கலாம். ஆனால் விற்பனைக்காக ஆடுகளை ெகாண்டு வந்துவிட்டு வியாபாரிகள் குவிந்த பிறகு திடீரென தடை விதித்து உள்ளனர். இதனால் வியாபாரிகளும், கால்நடை வளர்ப்போரும் பாதிக்கப்பட்டு உள்ளோம்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story