கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா-கட்டுப்பாடுகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகளை தீவிரமாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை நேற்று உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 4 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 346 ஆகும். அதில் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 237 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 என சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 97 பேர் பாதிப்பு
கொரோனா முதல் அலை வந்த போது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் கடைசி வரையில் பாதிப்பு ஏற்படாத மாவட்டமாக இருந்தது. 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக கொரோனா பரவியது. முதல் அலையின் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
கடந்த ஆண்டு (2021) 2-வது அலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஒரே நாளில் அதிகபட்சமாக 800 பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். இதன் பிறகு மாவட்டத்தில் நாள்தோறும் பாதிப்பு 5 பேர் என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது 3-வது அலையில் உச்சமாக நேற்று ஒரேநாளில் 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம், தடுப்பூசிகள் செலுத்தாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு அபராதம் என கட்டுப்பாடுகளை தீவிரமாக்கிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story