தேனி அருகே பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரம்


தேனி அருகே பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Jan 2022 9:50 PM IST (Updated: 8 Jan 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி:
‘கற்பகத் தரு' என்று அழைக்கப்படும் பனை மரம் எண்ணற்ற பலன்களை கொடுக்கிறது. இயற்கை, மனிதர்களுக்கு கொடுத்த மிகப்பெரிய கொடையே பனை. பனை உணவுகளின் முக்கிய அங்கம் வகிக்கும் பனங்கிழங்கு சீசன் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. பனங்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் மக்கள் அதை விரும்பி வாங்கி உண்கின்றனர். 
தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பனங்கிழங்கு விற்பனை நடக்கிறது. ஆனால், இவை யாவும் சங்கரன்கோவில், மதுரை உசிலம்பட்டி, பேரையூர், ராஜபாளையம், நெல்லை போன்ற பகுதிகளில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் பனங்கிழங்கு சாகுபடி அரிதாகி விட்டது. இந்தநிலையில், தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பனையேறும் தொழிலாளி கருப்பையா என்பவர் இந்த ஆண்டு பனங்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். தற்போது பனங்கிழங்கு விளைச்சல் அடைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யும் கிழங்குகளை சைக்கிளில் கொண்டு சென்று தேனியில் சாலையோரமும், தெருக்களிலும் விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து கருப்பையா கூறுகையில், "நான் பல ஆண்டுகளாக பனை மரம் ஏறி நுங்கு இறக்கி விற்பனை செய்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் நுங்கு சரிவர விற்பனையாக வில்லை. இதனால், பனங்கிழங்கு விளைச்சல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக குறைவான அளவில் சாகுபடி செய்தேன். இங்குள்ள மண்ணுக்கு அது நல்ல விளைச்சல் அடைந்தது. 
இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பனை விதைகளை கிழங்குக்காக சாகுபடி செய்தேன். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால் பனங்கிழங்குகளை அறுவடை செய்து வருகிறேன். ஒரு கிழங்கு ரூ.7 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. இதற்கு உரம், பராமரிப்பு செலவு எதுவும் இல்லை" என்றார்.

Next Story