பொங்கல் பரிசு தொகுப்பில் குறைபாடு புகார் ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பில் குறைபாடு புகார் காரணமாக ரேஷன் கடைகளில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு செய்தார்.
தர்மபுரி:
பொங்கல் பரிசு தொகுப்பில் குறைபாடு புகார் காரணமாக ரேஷன் கடைகளில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு செய்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு நீள கரும்புடன் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரம் குறைவாக உள்ளதாகவும், ஒரு சில பொருட்களின் எடை குறைவாக உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, நல்லானூர் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் கலெக்டர் திவ்யதர்சினி நேற்று பொங்கல் பொருட்களின் தரம், எடை குறித்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து சோதனை செய்தார். பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம், பொங்கல் பரிசு தொகுப்பு எந்த குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
முககவசம் கட்டாயம்
இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி நிருபர்களிடம் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்து 825 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 718 குடும்பங்கள் என மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 543 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு நீள கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு வரும் அனைத்து பொதுமக்களும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான, எடை குறைவு இல்லாத பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story