திருவண்டார்கோவிலில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
திருவண்டார்கோவிலில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருபுவனை, ஜன.
திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் இந்திரா நகரை சேர்ந்தவர் வரகுணபாண்டியன் (வயது 55). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 5-ந் தேதி திருவண்டார்கோவில் ஏரிக்கரை பகுதியில் ஆடுகளை அவர் மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மதிய உணவுக்காக சென்றிருந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ஒரு ஆட்டை திருடிச்சென்றனர். இந்த நிலையில் சிறிதுநேரம் கழித்து அங்கு வந்து பார்த்தபோது ஒரு ஆடு மாயமாகி இருந்தது. இது குறித்து திருபுவனை போலீசில் வரகுணபாண்டியன் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆடு திருடர்களை தேடி வந்தனர்.
திருவண்டார்கோவில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கூடப்பாக்கம் குப்பைமேட்டு தெருவை சேர்ந்த விஷ்ணு (22), வழுதாவூர் காலனி புதுநகரை சேர்ந்த ஆகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், 2 பேரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் 3 ஆடுகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆடு மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story