பெண்ணாடம் மின் பொறியாளர் அலுவலகத்தை சூழ்ந்த வெலிங்டன் ஏரி நீர்
கிளை வாய்க்காலை தூர்வாராததால் பெண்ணாடம் மின் பொறியாளர் அலுவலகத்தை வெலிங்டன் ஏரி நீர் சூழ்ந்தது. பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வீணாவதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பெண்ணாடம்,
திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் ஏரியில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் ஒரு கிளை வாய்க்கால் வழியாக பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
ஆனால் கிளை வாய்க்காலை தூர்வாராததால் வெலிங்டன் ஏரி நீர், முழுமையாக ஏரிக்கு செல்லவில்லை. மாறாக அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும், பெண்ணாடத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தையும் சூழ்ந்தது.
விவசாயிகள் கண்ணீர்
கடந்த 4 நாட்களாக தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மின் கட்டணம் செலுத்த வரும் மக்கள் மற்றும் மின் ஊழியர்கள் அவதி அடைகிறார்கள். இது ஒருபுறம் இருக்க விவசாய பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட வெலிங்டன் ஏரி நீர், வீணாவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கிளை வாய்க்காலை தூர்வாரி, வெலிங்டன் ஏரி நீர் முழுமையாக பாசனத்திற்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story