கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட மக்கள்
இன்று முழு ஊரடங்கு எதிரொலியால் கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க பொதுமக்கள் திரண்டனர். கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களை போலீசார் எச்சரித்தனர்.
கடலூர் முதுநகர்,
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர (தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் அசைவ பிரியர்கள் நேற்றே தங்களுக்கு தேவையான அசைவத்தை வாங்கி வைத்தனர்.
மீன் வாங்க திரண்டனர்
அதன்படி மீன் வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் நேற்று அதிகாலையிலேயே கடலூர் துறைமுகத்தில் திரண்டனர். அங்கு போட்டிபோட்டு மீன்களை வாங்கினார்கள். அதே சமயம் பலர், கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இருந்தனர். அதாவது முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.
போலீசார் எச்சரிக்கை
இது பற்றி அறிந்ததும் கடலூர் துறைமுக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முககவசத்தை அணிந்து கொள்ளுமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும் முககவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
இருப்பினும் தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தவர்களை போலீசார் எச்சரித்ததையும் காணமுடிந்தது.
Related Tags :
Next Story