67 பவுன் நகை-பணம் கொள்ளை
ராமநாதபுரம் அருகே 67 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே 67 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து...
ராமநாதபுரம் அருகே உள்ள மேலக்கோட்டை கிராமம் 9-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிமுகம்மது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மும்தாஜ் பேகம் (வயது 42).
இவர் மதுரையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மகளுக்கு துணையாக வீடுபிடித்து தங்கி உள்ளார். இங்குள்ள வீட்டை பூட்டி வைத்துவிட்டு மாதத்திற்கு ஒருமுறை வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மும்தாஜ்பேகம் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த அரை பவுன் தங்க மோதிரம், வெள்ளி கொலுசு, ரூ.15 ஆயிரம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
4 பேர் கும்பல்
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அந்த 4 பேர் வேறு எந்த வீடுகளிலாவது திருடியிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளில் வேறு எங்காவது கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளார்களா? என பார்த்தபோது, அடுத்த தெருவில் மலேசியாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த அகமது அலி (64) என்பவரின் வீட்டின் கதவினை உடைத்திருப்பது தெரிந்தது.
உடனடியாக போலீசார் அங்கு சென்று வீட்டிற்குள் பார்த்தபோது, அங்கும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
67 பவுன் கொள்ளை
இதனை தொடர்ந்து மலேசியாவில் உள்ள அகமது அலிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பீரோவில் 67 பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரமும் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த நகையும், பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.
மலேசியாவில் உள்ள மகளின் பிரசவத்திற்காக அகமது அலியும், அவருடைய மனைவியும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அங்கு சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நீண்ட நாட்களாக நோட்டமிட்டு பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர், சம்பவம் தொடர்பாக குகனேஸ்வரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் ெகாள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
Related Tags :
Next Story