பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் முருகேஷ் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் முருகேஷ் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லம் தரமற்றதாக உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
இதையடுத்து கலெக்டர் முருகேஷ் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக கிடங்குக்கு நேரில் சென்று திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அளவீடு சரியாக உள்ளதா என்றும் பார்வையிட்டார். அப்போது அங்கு அப்புறப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த தரமற்ற வெல்லத்தை பார்வையிட்டார்.
மேலும் பரிசு தொகுப்பில் உள்ள மற்ற பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
44 சதவீதம்
மேலும் அலுவலர்களிடம் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முறையாக அனுப்பப்படுகிறதா என்றும், பொருட்கள் தரமில்லை என்று பொதுமக்களிடம் புகார் ஏதும் வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசு தொகுப்பு 100 சதவீதம் எந்வித புகாருக்கும் இடமின்றி கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் அலுவலர்கள் கூறுகையில், ‘தரமற்ற 2,600 கிலோ வெல்லம் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்கு பதிலாக மாற்று பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 44 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.
ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், சார்பதிவாளர்கள் மீனாட்சி சுந்தரம், தீபன் சக்கரவர்த்தி, உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story