68 சதவீதம் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்-கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் 68 சதவீதம் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 68 சதவீதம் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
பகுப்பாய்வு மையம்
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கடந்த முறை போலவே தற்போதும் காந்திமதி பள்ளிக்கூடத்தில் கொரோனா பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்களை முதலில் டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர்களை தேவையான சிகிச்சை பிரிவுக்கு அனுப்புவார்கள். இதேபோல் கூடங்குளம், வள்ளியூர் அரசு மருத்துவமனைகளிலும், பாளையங் கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்திலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சேரன்மாதேவி, அம்பை அரசு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். 8 இடங்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயாராக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 577 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதுவரை 78 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
68 சதவீதம் பேர்
மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள் 76 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. இவர்களில் 52 ஆயிரத்து 81 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 68 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மும்முரமாக எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒமைக்ரான் அறிகுறிகள்
நெல்லை மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு முன் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பதிவு செய்தவர்கள் 100 சதவீதம் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது. அவர்களுடைய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நடமாடும் வாகனம்
இதைத்தொடர்ந்து "வேக்சின் ஆன்வீல்"என்ற நடமாடும் தடுப்பூசி வாகன சேவையை கொடியசைத்து கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ண லீலா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், டாக்டர் ராமசுப்பிரமணியன், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், தாசில்தார் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story