40 கிலோ வெள்ளியுடன் தலைமறைவான தொழிலாளி கைது
சேலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ வெள்ளியுடன் தலைமறைவான தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சேலம்:-
சேலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ வெள்ளியுடன் தலைமறைவான தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
40 கிலோ வெள்ளி மோசடி
சேலம் குகை மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 46). வெள்ளி வியாபாரியான இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளி பிரபு (42) என்பவர் கொலுசு செய்து தருவதாக கூறி 40 கிலோ வெள்ளி கட்டியை வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தேவேந்திரனுக்கு வெள்ளி கொலுசு செய்து கொடுக்கவில்லை.
இதனிடையே பிரபு திடீரென தலைமறைவாகி விட்டார். பின்னர் இந்த மோசடி குறித்து தேவேந்திரன் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக பிரபுவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் தலைமறைவான வெள்ளி தொழிலாளி பிரபு குகை பகுதியில் சுற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்று பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், பிரபு கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் வாடகை காரை ஓட்டி வந்துள்ளார். மேலும் அவர் மோசடி செய்த 40 கிலோ வெள்ளியை விற்று அதில் கிடைத்த பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து இழந்தது தெரியவந்தது. இதையடுத்து கைதான பிரபுவுக்கு கொரோனா பரிசோதனை செய்து அதன் பிறகு சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story