பேராவூரணி பகுதியில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்


பேராவூரணி பகுதியில் மண்பாண்டங்கள்  தயாரிக்கும் பணி தீவிரம்
x

பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பேராவூரணி:
பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதி நீலகண்டபுரத்தில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மண்பானைகள், மண்அடுப்புகள், மண்சட்டிகள், மண்மூடிகள், மூக்குசட்டி, பூந்தொட்டி, மண்கூஜா, குவளை, பூச்சாடி, மண் உண்டியல், இரட்டை அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, குத்துவிளக்கு, கார்த்திகை தீப விளக்கு, மண்குதிரை, மதலை பொம்மை, விநாயகர் சிலை ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது
இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களை பேராவூரணி,  அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆலத்தூர், திருச்சிற்றம்பலம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், ஆவுடையார்கோவில், கறம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கு தொழிலாளர்கள் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். 
லாபம் கிடைக்கவில்லை 
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், பானைகள், அடுப்பு தயாரிக்க ஆதனூர் பெரிய ஏரியில் மண் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.1000 கொடுத்து மண் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நீர்விட்டு நனைத்து, குலைத்து, புளிக்க வைத்து, உருப்படிகள் தயாரிக்கப்படுகிறது. 
மேலும் இவற்றில் செம்மண் கலவை பூசி சூளையில் அடிக்கவேண்டும். இதற்கு தேவையான மட்டை, வைக்கோல் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் பலர் இந்த தொழிலை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்றுள்ளனர். ஆனால் பெரும்பாலோர் பாரம்பரியமான இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம். இந்த தொழிலில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story