3 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம்
தஞ்சையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.17¾ கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.17¾ கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
சூரியஒளி மின்சாரம்
உலகத்தின் உயிராக மின்சாரம் இன்றைக்கு திகழ்கிறது. அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்அதிகம். நீர் மின்நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், அவற்றை பயன்படுத்தி எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் மின்சாரம் தயாரிக்க முடியாது.
சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகவும் குறைவு. நமது முன்னோர்கள் விளக்குகளில் எண்ணெய் ஊற்றியும், தீப்பந்தங்களை கொண்டும் வெளிச்சத்தை ஏற்படுத்தி பயன் அடைந்தனர். ஆனால் இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது.
மின்சார தேவையை சமாளிக்க...
மின்சாரத்தின் பயன்பாடு இயல்பாகவே கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும். கோடைக்காலம் மட்டுமல்ல பொதுவாக நமது வீட்டின் மின்சாரத்தின் தேவையை சமாளிக்க நமக்கு இயற்கை தரும் ஒரு வழி தான் சூரிய மின்னாற்றல். பொதுவாக இன்றைக்கு பெரும்பாலும் பல வீடுகளில் ‘இன்வெர்ட்டர்’ பொருத்தியிருக்கிறார்கள்.
மின்சாரம் இல்லாத நேரத்தில் ‘இன்வெர்ட்டரை’ வைத்து சமாளித்து வருகிறார்கள். ஆனால் இந்த ‘இன்வெர்ட்டரில்’ சேமிக்கப்படும் மின்சாரம் என்பது மின்வாரியம் மூலமாக நமக்கு கிடைக்கும் மின்சாரம்தான். அதைத்தான் சேமித்து பயன்படுத்தி வருகிறார்கள்.
சூரிய தகடு
மின் பற்றாக்குறையை சமாளிக்க உதவும். சூரிய தகடு மற்றும் அதற்கான ‘சார்ஜ் கண்ட்ரோலர்’ என்ற எந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி வீடுகளில் மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். இன்றைக்கு சில பெரிய வணிக நிறுவனங்கள், வீடுகளில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கும் சூரிய மின்சாரத்தை பயன்படுத்த விவசாயிகள் தொடங்கி விட்டனர். மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்படும்போது சில நேரங்களில் தடை ஏற்படுகிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க விவசாயிகள் பலர் சூரியத் தகடுகளை பொருத்தி, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் மூலம் மின்சாரத்தை தயாரித்து அதை பயன்படுத்தி மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
ரூ.17¾ கோடியில்...
அதேபோல் பல அரசு அலுவலகங்களிலும் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் தஞ்சை மாநகராட்சிக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு தஞ்சை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி செலவினங்களை குறைக்கவும், சூரிய ஒளி மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.17 கோடியே 79 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
இறுதி கட்டத்தில் பணிகள்
தஞ்சை பழைய மாரியம்மன்கோவில் சாலையில் சமுத்திரம் ஏரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் வளாகத்தில் தான் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டு, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் மின்சார இணைப்பு கொடுப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மாநகராட்சி மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரி கருத்து
இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் கூறும்போது, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.14 கோடியே 39 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி செலவினங்களை குறைக்கும் வகையிலும், சூரிய ஒளி மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story