பகவதி அம்மன் கோவிலில் குரு சமாதிக்கு பரிகார பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்துக்கு பின் குரு சமாதிக்கு பரிகார பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்துக்கு பின் குரு சமாதிக்கு பரிகார பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தீ விபத்து
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி கருவறைக்கூரை தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி நவம்பர் 24-ந் தேதி ரூ.1.08 கோடி மதிப்பில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஜோதிட பிரசன்னம்
இதற்கிடையே முதலில் செய்யப்பட்ட பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டதா? என்பதை அறிய கடந்த மாதம் 22-ந் தேதி ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் அம்மன் கோபம் தணியவில்லை. அம்மனின் தீக்காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனம் அரைத்து பூச வேண்டும். கோவிலில் உள்ள குரு சமாதிக்கு முறையாக பூஜை நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று குரு சமாதிக்கு பரிகார பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு மிருத்திஞ்ச ஹோமம், 8 மணிக்கு குரு பூஜை, 9 மணிக்கு அனுக்ஞ கலச பூஜை, 9.30 மணிக்கு கலசாபிஷேகம் ஆகியவை நடந்தது.
பூஜையை மணலிக்கரை மாத்தூர்மடம் சஜித் சங்கர நாராயணரு நடத்தினார். இந்த பூஜைக்கான செலவினை கருமங்கூடல் தொழில் அதிபர் டாக்டர் கல்யாணசுந்தரம் செய்திருந்தார்.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கொரோனா ஊரடங்கால் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று நடந்த இந்த பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் கோவில் தந்திரி சங்கர நாராயணர் தலைமையிலான பரிகாரபூஜை குழு உறுப்பினர்கள் சிவகுமார், மிசா சோமன், ஸ்ரீபதிராஜ், முருகேசன், ரத்தினபாண்டியன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story