பின்புற சுவற்றில் துளைபோட்டு கைவரிசை: 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை - 450 மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்


பின்புற சுவற்றில் துளைபோட்டு கைவரிசை: 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை - 450 மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 9 Jan 2022 1:43 PM IST (Updated: 9 Jan 2022 1:43 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்த 2 டாஸ்மாக் கடைகளில் பின்புற சுவற்றில் துளைபோட்டு நுழைந்து கொள்ளையர்கள் 450 மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கனகம்மா சத்திரம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை தமிழக ஆந்திரா எல்லை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடையில் தினந்தோறும் ரூ.2 லட்சம் வரை மது விற்பனையாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க சுவரில் துளைபோடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை சோதனை செய்தபோது அங்கு இருந்த 450 மது பாட்டில்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல்கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை பின்புற சுவற்றை துளையிட்டு கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மதுபான பாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story