ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர்


ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 9 Jan 2022 8:04 PM IST (Updated: 9 Jan 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை, 
மதுரை அருகே கொரோனா அச்சம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்தனர். இதில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூலித்தொழிலாளி
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள கல்மேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நாகராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(வயது 46). இவர்களுக்கு ஜோதிகா(23), அனிதா என்ற 2 மகள்களும், ஆதிஸ்வரன் என்ற ஆதி(15), சிபிராஜ் (14) என்ற மகன்களும் இருந்தனர். இதில் அனிதா கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜோதிகாவுக்கு வல்லரசு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவாக இருவரும் பிரிந்து விட்டனர். ஜோதிகாவுக்கு ரித்திஷ்(3) என்ற மகன் இருந்தான். இவர்கள் இருவரும், லட்சுமியுடன் சேர்ந்து வசித்து வந்தனர்.
சந்தேகம்
இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் லட்சுமியின் வீட்டின் கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். ஜோதிகாவின் தாய் லட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் ஆகிய இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாகராஜூக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தந்தையை கவனிப்பதற்காக ஜோதிகா, தயார் வீட்டிற்கு மகனுடன் வந்து விட்டார். இந்தநிலையில் நாகராஜ் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். பின்னர் அந்த வீட்டில் லட்சுமி, ஜோதிகா, ஆதிஸ்வரன், சிபிராஜ் மற்றும் ஜோதிகாவின் மகன் ரித்திஷ் ஆகியோர் வசித்து வந்தனர். ஜோதிகா கிடைத்த வேலையை செய்தபடி குடும்பத்தை கவனித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதிகாவுக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் அவர் மருத்துவ பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். மேலும், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்து விட்டால் அனைவருக்கும் வந்து விடுமே என்று அவர் அச்சம் அடைந்துள்ளார். தங்களது குடும்பத்தில் ஏற்கனவே 2 பேர் இறந்து விட்டதை நினைத்து லட்சுமி மற்றும் ஜோதிகா மன வேதனையில் இருந்தனர்.
தீவிர சிகிச்சை
கொரோனா வந்து குடும்பத்துடன் அவதிப்படுவதை விட குடும்பத்தோடு இறந்து விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு ஜோதிகா, அவரது தாய், தம்பி மற்றும் மகன் ஆகியோருடன் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆதிஸ்வரனுக்கும் விஷமருந்து கொடுத்துள்ளனர். ஆனால் அவர் சாப்பிடவில்லை என தெரிகிறது. மீதமுள்ள 4 பேரும் விஷமருந்தை குடித்து விட்டு தூங்கினர். இதில் 2 பேர் இறந்துள்ளனர். 2 பேர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

உறவினருக்கு போன் செய்து விட்டு தற்கொலை
உடல்களை வாங்க யாரும் இல்லை

லட்சுமி, தன்னுடைய கணவர் இறந்த நாளில் இருந்தே சோகமாக இருந்துள்ளார். மேலும், குடும்பத்தில் உள்ள மற்றநபர்களை எப்படி காப்பாற்றுவது என்ற எண்ணத்தில், உறவினர்களிடம் அடிக்கடி செல்போனில் பேசி புலம்புவாராம்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவும், உறவினர் ஒருவருக்கு போன் செய்து விட்டு, நாங்கள் எல்லோரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய போகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆனால், உறவினர் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். ஏன் என்றால் லட்சுமி அடிக்கடி இதுபோல் பேசி வருத்தப்படுவாராம். 
இந்தநிலையில் நேற்று காலை அந்த உறவினர் லட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால், நீண்டநேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது.
நாகராஜ்- லட்சுமியின் சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிராமம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து மதுரையின் பல இடங்களில் வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் சிலைமான் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்தநிலையில் தான் இந்த சோகமாக சம்பவம் நடந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்திஷ் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளது. நேற்று மாலை அவரை உடல்களை வாங்க யாரும் வரவில்லை.

Next Story