கூடலூரில் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது


கூடலூரில் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 9 Jan 2022 8:36 PM IST (Updated: 9 Jan 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

பருவ மழைக்காலம் நிறைவு பெற்றது தொடர்ந்து கூடலூர் பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடலூர்

பருவ மழைக்காலம் நிறைவு பெற்றது தொடர்ந்து கூடலூர் பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மழைக்காலம் நிறைவு

கூடலூர் பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் 6 மாதங்கள் மழை பெய்யும் காலமாக உள்ளது.

 இக்காலகட்டத்தில் பாண்டியாறு, மாயாறு, பொன்னானி, சோலாடி உட்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம்.

இதேபோல் ஏராளமான சிற்றாறுகளும் உள்ளது. மழைக்காலங்களில் உற்பத்தியாகும் தண்ணீர் பாண்டியாறு வழியாக அரபிக் கடலிலும், மாயாறு வழியாக பவானிசாகர் அணையிலும் கலக்கிறது. இதேபோல் கூடலூர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 

தண்ணீர் வரத்து குறைந்தது

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்து கடந்த 3 வாரங்களாக பகலில் நன்கு வெயிலும் இரவில் பனி பொழிவும் காணப்படுகிறது. 

இதன் காரணமாக வனப்பகுதி பசுமை இழந்து வருகிறது. 
தொடர்ந்து பாண்டியாறு, பெரியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து காணப்படுகிறது. இதேபோல் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஹெலன், பல்மாடி, ஆத்தூர் உள்ளிட்ட தடுப்பணைகளிலும் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இதன் காரணமாக இனி வரும் நாட்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் வனவிலங்குகளும் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

எனவே குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என கூடலூர் நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.


Next Story