ரெட்டிச்சாவடி போலீசாரின் கெடுபிடியால் பாகூர் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் திடீர் நிறுத்தம்


ரெட்டிச்சாவடி போலீசாரின் கெடுபிடியால் பாகூர் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் திடீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Jan 2022 10:15 PM IST (Updated: 9 Jan 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

ரெட்டிச்சாவடி போலீசாரின் கெடுபிடியால் பாகூர் பகுதி கிராமங்களுக்கு திடீரென்று பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அரியாங்குப்பம், ஜன.
ரெட்டிச்சாவடி போலீசாரின் கெடுபிடியால் பாகூர் பகுதி கிராமங்களுக்கு திடீரென்று பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
போலீசார் கெடுபிடி
பூக்கோள ரீதியில் புதுச்சேரியும், தமிழகமும் பின்னிப்பிணைந்து உள்ளது. குறிப்பாக புதுச்சேரி - கடலூர் சாலையில் புதுவை எல்லையில் ரெட்டிச்சாவடியும், விழுப்புரம் சாலையில் கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களும், கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம், முதலியார்குப்பம் போன்ற கிராமங்களும் உள்ளன. 
இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கும்போது, தமிழக போலீசாரின் கெடுபிடியால் புதுவை எல்லையோர கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் மூடியிருந்தன. மாநில எல்லையில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கிராமப்புற மக்கள் அவதி
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து அரியாங்குப்பம், தவளக்குப்பம் வழியாக கன்னியக்கோவில், பாகூர், மடுகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு  தனியார் பஸ்கள் நேற்று வழக்கம்போல சென்றன. தவளக்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி போலீசார், புதுவையில் இருந்து வந்த தனியார் பஸ்களை வழிமறித்து திருப்பி அனுப்பினர். ஒரு தனியார் பஸ்சுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனால் பாகூர் வரை உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பஸ்கள் அனைத்தும் திடீரென நிறுத்தப்பட்டன. இதை அறியாமல் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் நீண்ட நேரமாக மக்கள் காத்திருந்தனர். இதில் ஒரு சிலர் அவசர வேலை காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் புதுச்சேரிக்கும், பாகூர் பகுதி கிராமங்களுக்கும் சென்றனர்.
பாதிக்காத வகையில்...
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும்போது, இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, புதுவை கிராம மக்கள் பாதிக்கப்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story