கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
103 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரையில் நாள்தோறும் பாதிப்பு 5 முதல் 10-க்குள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 97 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கொரோனா தொற்று அதிகரித்து நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 103 பேர் பாதிக்கப்பட்டனர். 15 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 44 ஆயிரத்து 451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 762 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 327 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக கூடி மேலும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால், தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிப்பது, இரவு 10 மணிக்கு மேல் தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, கொரோனா தடுப்பூசி போட்டவர்களை பொது இடங்களுக்கு அனுமதிப்பது போன்ற நடைமுறைகளை தீவிரப்படுத்திட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story